ஞாயிறு, நவம்பர் 28, 2010

மதமும் மனித உரிமை மீறலும் - அரிமா 7


சென்ற கட்டுரை தொடர்ச்சி....

பாத்திமா மாதா கோயில் திருவிழா என்று வைத்துக் கொள்ளுங்கள் சுமார் இருநூறு பேர் தேர்பவனிக்கு வருவார்கள் . நகரத்தின் முக்கிய சாலைகள் வழியாக இக்கூட்டம் செல்ல வேண்டும் , பவனியில் இரண்டிரண்டு பேராக செல்வார்கள். மெதுவாக செபமாலை உருட்டிக்கொண்டு நத்தை போல் நகர்வார்கள் . நகரப் பேருந்துகள் , வெளியூர் பேருந்துகள் , நடுச் சாலையில் காத்துக் கிடக்க வேண்டும் . இதுதான் அநீதமான சாலை மறியல் . இருக்கிற உரிமைகளை அளவுக்கதிகமாக எடுத்துக்கொண்டு மனித மாண்புகளை காலில் இட்டு நசுக்குவது ! வெத்து வீராப்பை வெளிச்சம் போட்டு காட்டுவது!!

அதிகாலையில் மசூதியில் ஒலிபெருக்கி வழியாக ஓதுகிறார்கள் . ஒலி காதை கிழிக்கிறது. தூக்கம் கெடுகிறது. இரவு நெடுநேரம் உழைத்துவிட்டு தூங்குகிற உழைப்பாளியும் அச்சத்தம் கேட்டு அதிர்ச்சி கொண்டு எழ வேண்டும். மார்கழித் திங்களில் இனி அய்யப்பசாமிக்கு ஒலி பெருக்கிகள் அலறும் . தேவாலயங்களில் அவரவர் விருப்பம்போல் நள்ளிரவு வழிபாடுகள் என்றும் , அதிகாலை வழிபாடுகள் என்றும் ஒலிபெருக்கிகள் அலறும். மனிதத் தன்மை இல்லா இச்செயல்களை மதச் சகிப்புத் தன்மை எனும் அழுகிப்போன கொள்கையை மக்களிடையே திணிக்கிறார்கள் .

உசேன் இருவது ஆண்டுகளுக்கு முன் வரைந்த சரஸ்வதி ஓவியத்திற்காக அவரது ஓவியக் கூடத்தை தகர்த்து நொறுக்குகிறது பஜ்ராங்க்தல் எனும் பார்பனிய அமைப்பு . அருண் சவுரி போன்ற பார்பனிய பற்றாளர்கள் எரிகிற தீயில் என்னை விடுவது போல் மத உணர்சிகளை தூண்டிவிட்டு வேடிக்கை பார்கிறார்கள் . ஆக மதத்தின் பெயரால் மனிதபண்பை இழந்தால் , மனித உரிமைகளை மீறினால் , பொது நலனை காலில் இட்டு நசுக்கினால் அதற்கெல்லாம் மதவாதிகள் ( அவர்கள் கிருத்துவரானாலும் , இசுலாமியரனாலும் , பார்பனரனாலும் ) புனித புனுகு பூசிவிடுவர் .

இன்று தாழ்த்தப் பட்டோர் உரிமைக்காக ஆயர்கள் கண்ணீர் சிந்துகின்றனர் . சண்முகநாதன் போன்ற ஆர் .எஸ் .எஸ் தலைமையும் தாழ்த்தப் பட்டோர் நலனுக்காக விக்கி விக்கி அழுகிறது. அரசோடு சலுகைக்காக போராடும் திருச்சவை தான் வழங்கவேண்டிய உரிமைகளை தன் மக்களுக்காக வழங்கி இருக்கிறதா? தாழ்த்தபட்டோருக்கு தனி கல்லறைகள் உண்டா ? இல்லையா? சாமியார்கள் மத்தியில் சாதி சங்கங்கள் உண்டா? இல்லையா ? ஆயர்களில் சாதி வெறியர்களும் பற்றாளர்களும் உண்டா? இல்லையா? தாழ்த்தப்பட்ட தொல்குடியினர் திருச்சவைக்குள் போராடிய போதெல்லாம் வன்முறையும், வசைமொழியும் கிருத்துவத் தலைமைகளால் அள்ளித் தெளிக்கபட்டதா இல்லையா? பாண்டிச்சேரியை தலைமையிடமாக கொண்ட சில துறவற அவைகள் வெளிபடையாகவே சில சாதிக் காரர்களுக்கவும் , தாழ்த்தபட்டவர்களுக்ககவும் தனித் தனியாக நடத்தப் படுகிறதா இல்லையா? தொல்குடியினரின் போராட்டங்களை பிற பொது நிகழ்சிகளில் ஆயர்கள் கொச்சை படுத்தி பேசியதில்லையா? தெலுங்கர்கள் அதிகமாக வாழும் அவைகளில் தமிழர்களின் உரிமைகள் பறிக்கபடுவதும் நசுக்கபடுவதும் உண்டா இல்லையா? இதெற்கெல்லாம் கிருத்துவத் தலைமை என்ன செய்துகொண்டிருகிறது ? பூசை மந்திரத்தை திருத்துவது , பீடத்தில் பூ வைக்கதிருக்க சட்டம் போடுவது என்று நேரத்தையும் காலத்தையும் போக்குகிறார்கள்.

இன்று தாழ்த்தப்பட்டோர் உரிமைக்காக போராட சட்டபடியான உரிமை இன்றைய கிருத்துவத் தலைமைக்கு இருக்கலாம் .ஆனால் நன்னெறி அடிப்படையில் பலருக்கு அத்தகுதி கிடையாது . எப்படி ஆர் எஸ் எஸ் இன்று நீலிகண்ணீர் வடிக்கிறதோ அதற்கும் கிருத்துவ தலைமை தாழ்த்தப்பட்டோருக்கு இன்று வடிக்கும் கண்ணீருக்கும் வேறுபாடு இல்லை . பார்ப்பனீயம் அல்லது பாசிசம் என்பது பார்பனருக்குள் மட்டும் இல்லை . ஆர் எஸ் எஸ் போன்ற தீவிர அமைப்புக்குள் மட்டும் இல்லை கிருத்துவ , இசுலாமிய சாதியத் தலைமைக்குள்ளும் புதைந்து ஊறிக் கிடக்கிறது . மதங்களுக்குள்ளும் சாதிகளுக்குள்ளும் , மொழி அடிப்படையிலும் , பாலியல் அடிப்படையிலும் ஒடுக்கபடுகிற எல்லோரும் ஒன்றிணைந்து போரிட்டாலேயே கபடர்களின் வேடங்களைக் கிழிக்க முடியும் .

தொடரும்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக