திங்கள், நவம்பர் 15, 2010

மதமும் மனித உரிமை மீறலும் - அரிமா 5


சென்ற கட்டுரை தொடர்ச்சி .....

துறவற அவைகள் ஏடுகளில் விதவிதமாக விளம்பரம் செய்து இளைஞர்களையும் , இளம் பெண்களையும் தத்தம் அவைகளில் சேர அழைக்கும் . இயேசுவை ஏழைகளில் காண .... சபை உன்னை உருக்கமாய் அழைக்கிறது. - ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமை வாழ்வு வழங்கிட - நலிவுற்றோருக்கு நற்செய்தி அறிவித்திட ,- என நடைமுறையோடு தொடர்பில்லாத சொல்லடைகளை வைத்து மயக்குற அழைப்பார்கள் . ஒவ்வொரு அவையும் இம்மாதிரி ஆள்பிடிப்பதர்க்கு என்றே ஆட்களையும் , தொடர்பாளர்களையும் நிரம்ப வைத்திருப்பார்கள் . ஆதிக் கிறுத்துவரின் வாழ்வைக் கண்டு ஆண்டவன் அவர்களின் எண்ணிக்கையை உயர்த்தினானாம். சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாத தூரம் வந்துவிட்ட இக்காலத்தில் கடவுளுக்கே இவர்களால் நெருக்கடிதனே !

சின்ன அகவையிலேயே பிள்ளைகளைப் பிடிக்க அவைகளுக்குள் போட்டி நடக்கிறது . தமிழகச் சூழலில் வளரும் குழந்தைகள் பெரும்பாலும் பெற்றோரைச் சார்ந்து வாழப் பழக்கப்பட்டவர்கள் . தாங்களாக தங்களது வாழ்வு பற்றி முடிவு எடுக்க திராணியற்றவர்கள். ஆக இம்மாதிரி துறவற அவைகளில் சேருவது பெரும்பாலும் பெற்றோர்களின் விருப்பு வெறுப்பு எனும் அடிப்படியிலேயன்றி வேறொன்றுமில்லை . அவர் தற்சார்போடு முடிவெடுக்கும் ஆற்றல் உள்ளவரானால் ஒருவேளை நம்மோடு சேரமட்டாரோ என்கிற அச்சம் அவையருக்கு உண்டு . எட்டாம் வகுப்பு முடிந்தவுடன் கொத்திக்கொண்டு போகிற அவைகளும் உண்டு . கவர்சிகரமான விளம்பரங்களும் பசப்புச் சொற்களும் கூறி அழைத்துக்கொண்டு செல்வாரும் உண்டு.

உருவாக்கத்திற்கும் பயிற்சியளித்தலுக்கும் வேறுபாடு உண்டு. இயல்பும் , பட்டறிவும், துணைகொண்டு தங்களது வாழ்க்கைக்கும் , வளர்ச்சிக்கும் , பொறுப்பைத் தாங்களே எடுத்துக்கொண்டு பிறரின் வழிகாட்டுதலோடு வளர்வது உருவாக்கம். குதிரை, நாய், கிளி, போன்ற உயிரினங்களுக்கு அளிப்பது பயிற்சி . இதில் தனிச் சிந்தனைக்கு , பொறுப்பெடுத்து செய்தல் போன்றவற்றிற்கு இடம் கிடையாது . கட்டளைகளை நிறைவேற்ற வேண்டும் . சொன்னதை செய்ய வேண்டும் . செய்தால் பாராட்டு கிடைக்கும் . தட்டிக் கொடுப்பார்கள் . குருட்டுத்தனமாய் பணிந்து வாழ்ந்தால் துறவற வாழ்வில் கிடைப்பதும் அதுவே . சிந்திப்பது , வினா எழுப்புவது, எதார்த்தத்தில் பெரும் குற்றங்களாகும் . ஆகவே பெரும்பாலான துறவியருக்கு சொல்லிக் கொடுத்ததே தெரியுமேயன்றி, தற்சார்பு, தனிச்சிந்தனை என்பதெல்லாம் கிடையாது . வினாக்கள் கேட்டதற்காக துறவறச்சவையிலிருந்து , குருமடங்களில் இருந்தும் வெளியே வீசி எறியப்பட்டவர்களின் சோகக் கதைகள் ஏராளம் . தேவ அழைத்தல் உனக்கு இல்லையென்று காரணம் சொல்லுவார்கள் . ஏதோ கடவுளுக்கு சித்திரகுப்தன் வேலை பார்பதுபோல ! நல்லவர்களை, நேர்மையானவர்களை துறவறமும், கிறுதுவச்சமயமும் நிறையவே இழந்துள்ளன .

உருவாக்க நேரத்தில் நாள் அட்டவணை ஒன்று பின்பற்றப்பட வேண்டும் . பசித்தாலும் பசியாவிட்டலும் , மணியடித்தால் தீனியின் முன்னால் போய் நிற்க வேண்டும் . ஒர்மையில்லா ஒரு மன்றாட்டை படிப்பார். பின்பு தீவனம் போடப்படும். சட்டம் , ஒழுங்கு, எனும் பெயரில் ஒரு போலித்தனமான , மனித உணர்வற்ற கடமைகள் ஆற்றப்படும்.

ஒருநாள் அது மாலை நேரத்து வேலை நேரம். கையில் வாளியைத் தூக்கிக்கொண்டு செடிகளுக்கு தம்பியொருவன் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தான், இடது கையில் குடையை விரித்துப் பிடித்துக்கொண்டு ! மழை கொட்டுகிறது. அவனோ கடமையைச் செய்துகொண்டிருந்தான் . அருகிலிருந்த பெரிய சாமியார் கேட்டார் . என்னடா முட்டாள்தனமான செயலென்று. அவனாக சிந்தித்து முடிவெடுக்கும் ஆற்றலை அவனுக்கு கொடுத்திருந்தால் அவன் அங்கு வாழவும் முடியாது.

விதவிதமான தியானங்களை அவர்களுக்கு நடத்துவார்கள் . கண்ணை மூடி நிலவைக் காண சொல்லுவார்கள் . கண்ணை மூடி மென்மையான உணர்வுகளை உணர அழைப்பார்கள். மெல்லிய ஒளியில் அமர்ந்து பாடல்களை இசைத்து கடவுளைக் காண முயலுவார்கள் . பின்பு சில நிமிடங்களில் கிடைத்த உணர்வுகளை மற்றவர்களோடு பகிரச் சொல்லுவார்கள் . இந்நேரத்தில் பெரும்பாலும் கதையளப்பார்கள் .தியானத்தின் போது தூங்கியவன் கூட கடவுளைக் கண்டதாக நாம் நம்பும்படி பகிர்ந்துகொள்வான். வயிறு புடைக்க உண்டு களித்துவிட்டு ஏழைகளுக்காக உருக்கமாக வேண்டுவர் . மழைக்காக செபிப்பர். அதே நாளில் மாலை நேர விளையாட்டைக் கெடுப்பதுபோல மழை வந்துவிட்டால் கடவுளைக் கரித்துக்கொட்டுவர்.

ஈராக்கின் மீது அமெரிக்க வல்லட்சிப் படைகள் குண்டுமாரி பொழிந்து வந்தநேரம். ஒவ்வொருநாளும் தொலைக் காட்சியின் மாலை செய்தியிலும் போர் பற்றிய செய்தித் தொகுப்பு காட்டப்பட்டது. அதை காண முண்டியடுத்துகொண்டு பலர் ஓடுவர். ஆர்வமாய் அதை காண்பர். பின்பு அந்த ஈராக்கிய மக்களுக்காக கண்ணீர் சிந்தி மன்றாடுவர். ஒரு நாள் போர் நிறுத்தம் செய்தியாக வாசிக்கப்பட்டது . - அய்யய்யோ போர் நின்னுடுச்சா ! - என மிக இயல்பாக அக்கநீர்த்துளி மகான்கள் உச் கொட்டி வருத்தப்பட்டுக் கொண்டனர்.

உருவாக்கத் தளங்களில் போய் பார்த்தால் வானுலகில் உள்ளது போன்ற காட்சியை காணலாம் . அமைதி! கண் மூடிச் செபிக்கும் இளைஞர்கள் , கடமைகளை இயந்திரம் போல ஆற்றும் உயிர்கள் ! இப்படி பலப் பல காட்சிகளை காணலாம். இது ஒரு சுடுகாட்டு அமைதி. வாழ்வோடு தொடர்பில்லாத செபங்கள். அன்னியபடுக்கிடக்கும் ஒரு வாழ்வு . உழைப்போடு தொடர்பில்லாத உணவு. மக்களின் அன்றாட பிரச்சினைகளை , வாழ்வை, பொழுது போக்குகளை , உறவுகளை , அறியாத குமுக ஆய்வாளர்களாம் இவர்கள் !

மனித ஒர்மயைதான் அம்மானாக்கரில் முதன்முதலாக மழுங்கடிக்கிறார்கள் . ஆகவே முதலில் பிற மனிதரிடமிருந்து அவர்களை அப்புறப் படுத்திவிடுவார்கள். மக்களோடு மக்களாக வாழ்கிறவனுக்கு இருக்கிற பட்டறிவு உள்ளே பயிற்சி பெற்று வருபவர்களுக்கு இருப்பதில்லை . நான்கு சுவற்றுக்குள் உலகமே இருப்பதாய் நினைக்கும் கிணற்றுத் தவளைகள் இவர்கள் . இதை நியாயப் படுத்துகிற ஒரு கருத்தியலையும் எண்ணத்தில் ஏற்றி வைத்திருப்பார்கள் . '' செபித்தால் எல்லாம் மாறிவிடும்'' என்று சொல்லுவார்கள் . செய்ய வேண்டியதை செய்ய மாட்டார்கள் . தங்களது சோம்பேறித்தனத்தை , ஈடுபாட்டை நோக்கிய அச்சத்தை , நம்பிக்கையற்ற தனத்தை இப்படி புனிதப்புனுகு போட்டு மறைப்பார்கள்.

சின்ன கயிறு பின்னி வைத்துகொண்டு வெள்ளிக் கிழமை இரவுகளில் விளக்கை அணைத்துவிட்டு தங்களுக்கு தாங்களே கசையடி கொடுத்துக் கொள்கிறார்கள் . இயேசுவின் கசயடியை தாங்களே பெற்றுக் கொள்கிறார்களாம் . இது ஒரு நாடகம் . நசுக்கப்பட்ட மக்களின் சார்பாக இயேசு எடுத்த உறுதியான சில நிலைபாடுகளுக்காக கிடைத்த தண்டனை அக்கசயடி . அவர் தான் யூத இன மக்களுக்காக போராடி மாண்ட ஒரு வீரப் போராளி. கோழைகள் எப்படி இதில் பங்கேற்க முடியும் ? ஏழைக்காக ஒரு நேர உணவை ஒதுக்க மாட்டார்கள் . ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டங்களில் இணைய மாட்டார்கள் . தவறை தவறு என சுட்டிக்காட்ட திராணியற்றவர்களாக இருப்பார்கள் . ஆயரை எதிர்த்தால் எதிர்காலம் கிடையாது என எண்ணுவார்கள். அதிபரை எதிர்த்தால் அழிந்தோம் என்பார்கள் . இவர்கள் இயேசுவின் மாணவர்களாம் !

உருவாக்க காலம் என்பது அவைக்கு அவை மாறுபடுகிறது . பெரும்பாலான அவைகள் பொன்னான இளமைக் காலத்தை நீண்ட கால பயிற்சி எனும் உருளையை ஏற்றி சிதறிடித்து விடுகிறார்கள் . 16 ஆண்டு கால பயிற்சி கொடுப்போரும் உண்டு. பலருக்கு பயிற்சியின் நிறைவில் அஞ்சலகம் சென்று ஒரு தொலைவரி ( தந்தி ) விண்ணப்ப படிவத்தை வாங்கி நிரப்பி அனுப்பத் தெரியாது. ஒரு மக்கள் கழகம் ( சங்கம் ) அமைப்பது எப்படி என்று தெரியாது. மக்கள் போராட்டத்தில் ஈடுபடவோ , வழிநடத்தவோ தெரியாது . தமிழ் பேச தெரியாது. ஆனால் கத்தி கரண்டி , முள் வைத்து உண்ணத் தெரியும் , பார்பதற்கு கொழுகொழுவென இருக்கும் பலருக்குள் ஆன்மா இருக்காது. மனித பண்புகள் இருக்காது. வெயிலில் நடக்க முடியாது. நகரப் பேருந்தில் பயணம் செய்ய முடியாது. மக்களுக்காக தெருவில் இறங்கி கூக்குரலிட முடியாது. புரட்சிக்குப் பூபாளம் பாடும் புத்துலகச் சிற்பிகலாம் இவர்கள்!

குருமடத்திலோ, துறவற வாழ்விலோ ,நுழைந்துவிட்டால் , அது ஒரு புனிதமான வாழ்வு. போய்விட்டு திரும்பக்கூடாது என எளிய மக்கள் பலர் நினைக்கின்றனர். ஆகவே ஒன்றுமறியாமல் உள்ளே நுழைந்த இளையோருக்கு உள்ளே போனபின்தான் உள்ள நிலைமை புரிகிறது. வெளியேறிவிட வேண்டும் என நினைத்தால் குமுகாயம் ஏற்றுக்கொள்ளது எனும் பெருங்கவலை வாட்டுகிறது.
உள்ளேயோ அதைவிட பெருங்கொடுமை! ஆக மெல்லவும் முடியாமல் , விழுங்கவும் முடியாமல் வாழ்வில் பிடிப்பிழந்து நடைபிணங்களாக அலைவோரே பலர்.

இவ்வக்கட்டைச் சிறப்பாக பயன்படுத்தி கொள்வர் அவை உயர் அதிகாரிகள் . பிடித்த எலியை எப்படி பூனை அணு அணுவாகச் சாகடிக்குமோ அப்படி கொல்லுவர் . வெளியே அனுப்பி விடுவோம் என மிரட்டுவார். இளம் உள்ளங்கள் பயந்து நடுங்கி சாகும். இயேசு ஏழைகளை நேசித்தார் என்று தொண்டைகிழியப் பேசும் இவர்கள் ஏழை மாணவர்களை தம் அவைக்கு தேர்ந்தெடுக்க மாட்டார்கள் .
சாமானியரை நேசித்த இறைவன் என முழங்குவார்கள் . தொல் தமிழ் மாணவர்களை எப்படியாவது பயிற்சிக்காலத்தில் ஒழித்துக்கட்ட முயல்வார்கள். தாய் தகப்பனை அண்ட விடமாட்டார்கள். அதுவும் மலையாளிகள் வாழும் அவைஎன்றால் தமிழ் மாணவ, மாணவியருக்கு கொடுமையான வாழ்வு வேறெங்கும் அமையாது.

இப்பயிற்சிக்காலத்தில் ஒட்டு மொத்தத்தில் வழிநெடுக பொறிகள் வைத்திருப்பார். தப்பிப்பது மிக கடினம் . அதிபர்களுக்கு சிங்கி தட்டவேண்டும் . அப்போது தப்பிக்கலாம் . தப்பித் தவறி மனித உரிமை , வினா எழுப்புதல் , தற்சார்பு , என மனிதப் பண்பில் உயர்ந்தால் அந்தோ பரிதாபம் ! கோடரி அவர் வாழ்வைத் தாக்கும் , எனவே , பயிற்சிக்காலம் முடியும் வரை ஒரு போலி வேடம் தரிப்பார் மாணவர். கூழைக்கும்பிடு போடுவார். குருட்டுப் பணிவை வெளிச்சம் போட்டுக்காட்டுவார் . பயிற்சியின் இறுதியில் மனித பண்பு கொஞ்ச நஞ்சம் மீதமிருந்தால் அவருக்கு மேலும் சில ஆண்டுகள் பயிற்சியாக ( தண்டனையாக ) கொடுத்து முழுமையான மனிதபண்பு அவரில் மறைந்து ஒழிந்த பின்னரே இறுதி உறுதிப்பாடு. குருப்பட்டம் போன்ற நிலைகளை அவர்களுக்கு கொடுப்பர். நெருஞ்சி முல்லை விதைத்துவிட்டு நேந்திரம் பழத்தையா தேட முடியும் ? விதைத்ததை தானே அறுக்க முடியும்!

தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக