வியாழன், நவம்பர் 11, 2010

மதமும் மனித உரிமை மீறலும் - அரிமா - 3


சென்ற கட்டுரை தொடர்ச்சி ...

இன்று இலங்கையின் பாலசூரியா பற்றி கேட்க ஆரம்பிக்கிறோம் . மரியாளை , புரட்சிகரமான பெண்ணாக இவர் பார்த்தாராம் . அதோடு நின்றிருந்தால் பிரச்சனை ஒன்றுமிருந்திருக்காது . ஆனால் , அப்படி பார்ப்பதன் விளைவாக திருசவையின் இன்றய போக்குகளில் சில அடிபடையான மாற்றங்களை கொணர வேண்டும் எனும் கருத்தியலை உள்ளடக்கியதாக அப்பார்வை உருவெடுக்கும்போது திருச்சவையின் அதிகாரிகள் வெகுண்டு எழுகிறார்கள் . மனித உரிமை மீறல்கள் மிக இயல்பாக நடக்கிறது . உளச்சான்று அறவே இன்றி ஆட்களையும் அவர்தம் உரிமைகளையும் , உணர்வுகளையும் காலிலிட்டு நசுக்குகிறார்கள். இவ்வெதார்தங்களை காணும்போது ஒன்று மட்டும் தெளிவாகிறது . இவர்கள் தூக்கிபிடிக்கும் கோட்பாடுகள் இவர்களது தன்னலத்தை வளர்த்தெடுக்க , ஆட்சி அதிகாரத்தை , தக்க வைத்துகொள்ள ஒரு ஏதுவான கருவியாக இருக்கிறது. ஆகவே தவறான கோட்பாடுகளையும் கூட தங்களை காத்துக் கொள்ளும் குறுகிய நோக்கங்களுக்காக கட்டி அழுகிறார்கள் . எலும்புகூட்டுக்கு சுகமில்லை என்று கட்டி அழுகிறவர்களிடம் , ''சடம் அது '' என்று சுட்டிக் காட்டினால் , எழுந்து உதைகிறார்கள் . வைக்கோல் திணித்து பொய் கன்றுகளை உருவாக்கி மாட்டிலிருந்து பாலை கறப்பார்கள். அதாவது சரி போகட்டும் எனலாம் , ஆனால் பொய் மாட்டையே உருவாக்கி மடியை இழுத்தால் பாலா வரும்? திருச்சவையின் பல கோட்பாடுகள் 'வைக்கோல் பொம்மைகளே !'

திருச்சி இறையியல் கல்லூரியில் 18 ஆண்டுகளாக செல்வராசு எனும் ஒரு பேராசிரியர் பணிபுரிந்து வந்திருக்கிறார் , அவர் கல்லூரியில் இருந்துகொண்டே எதை மாணவர்களுக்கு சொல்லி கொடுக்கிறோமோ அதற்கு மெல்ல மெல்ல உரு கொடுக்க துவங்கியிருக்கிறார். அதாவது , மக்களுக்கான நியாயமான போரட்டங்களில் ஈடுபடுவது , தொல் தமிழருக்கான சீரிய நிலைபாடுகள் எடுப்பது , தொழிலாளர்கள் போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திகொள்வது என செல்ல ஆரம்பித்தார். ஆயர்கள் ஒன்று கூடி ஒரு முடிவுக்கு வந்தனர். இனி 'விட்டுவைக்கலாகாது ' என நினைத்தனர். ''பேராசிரியர்களை களப்பணிக்கு அனுப்ப வேண்டும் '' என்று பொதுவாக அறிக்கை ஒன்றை ஒன்றும் அறியாதவர்கள் போல முதலில் வெளியிட்டனர். பின்பு , ''கட்டிலுக்கு ஏற்றார்போல காலை வெட்டினார்கள் '' இவருக்கு களப்பணி பட்டறிவு தேவை என்று காரணம் கூறி ஒப்பந்தங்களை உடைத்து , பனி நீக்கம் செய்தனர். இவரது களப்பணிதானே இவரை காலி செய்வதற்கே காரணமானது ! ஆனால், அழுகிய முட்டைகளுக்கு சந்தனம் தேய்த்தார்கள் . ''கடவுளின் திட்டமிது.... ஏற்றுக்கொள்ளுங்கள் '' என வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினார்கள் . கடவுளையே தங்களின் மட்டமான செயல்களுக்கு துணைக்கு அழைத்தார்கள் .18 ஆண்டுகாலம் சொந்த பிள்ளையை போல வளர்த்தெடுத்த மாணவர்களிடம் ''போய் வருகிறேன் '' என்றுகூட சொல்ல வாய்ப்பு தரவில்லை. உடன் பணியாற்றிய தோழர்களிடம் கூட 'நன்றி' சொல்லவும் விடவில்லை. ஆக ,அங்கே மனிதம் கொலையுண்டது .உளச்சான்று நெரிக்கபட்டது. தூக்கு தண்டனை பெற்றவன்கூட இறுதிவிருப்பத்தை நிறைவேற்றிகொள்கிறான். ஆனால் திருச்சவையின் தண்டனை பெற்றவர்களுக்கு அதுவெல்லாம் சாத்தியமில்லை.

சாமானியனுக்கும் தெரியும் இது ஒரு சதி என்று. எங்கப்பன் குதிருக்குள் இல்லையென்றால் உலகமே நம்பிவிடுமா என்ன? ஆனால் பூனைகள் கண்ணை மூடிவிட்டால் உலகமே இங்கு இருண்டு விடுகிறது.! குற்றம் , குற்றமில்லை , வழக்கு, உசாவல் , எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் . மனிதம் எங்கே போனது.? உளச்சான்று அறவே கிடையாதா? மனித உணர்வுகளை இப்படி நடுங்கும்படி திடுதிப்பென செய்கிறோமே என மனிதபண்பு ஒரு மயிரளவும் இவர்களுக்குள் இழையோடாதா? திருச்சவையின் சர்வாதிகரத்திற்கு பெயர்தான் கடவுளின் விருப்பமா? இப்படி பலர் வினா எழுப்ப துவங்கினர்.

மற்றொன்றையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும் . திருச்சவையில் ஊழல், ஒழுக்ககேடு, சாய்க்கடை அரசியல் , சாதிவெறி , இதுவெல்லாம் பிரச்சனைக்குரிய செயல்பாடுகளே அல்ல . இவைகள் நடைமுறையில் மிக எளிதாக நடைபெற்று வருகிறது. அதிகாரத்தில் உள்ளவர்கள் இதை கண்டுகொள்வதில்லை. காரணம் ; ஒன்று ,எதிர்க்க திராணி இல்லாமை . மற்றொன்று , எதிர்க்கும் தகுதி இல்லாமை. ( ஏனெனில் இவர்களே இம்மட்டச் செயல்பாடுகளை மடைதிறந்து விடுகிறவர்கள்)

பள்ளி ஆண்டு துவங்கும்போது , ஆயர்கள் அறிக்கை விடுவார்கள் . ''நன்கொடை வாங்காதீர்கள் , கிருத்துவருக்கு நம் நிறுவனங்களில் முதலிடம் கொடுங்கள் '' என்று. ' எளியோருக்கு நற்செய்தி' அறிவிக்கும் அவைகள் , புரட்சிகர 'கராத்தே' கன்னியர்கள் அவை இப்படி . ''ஏழைகளுக்காகவே ஏங்கி ஏங்கி வாழுகின்ற அவைகள்'' இந்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் உண்டு. இவர்களின் ஆலயங்களில் , இல்லங்களில் எல்லாம் அறிக்கை வாசிக்கப்படும் , பின்பு ......துடைத்து தூர வீசப்படும். 50,000 உருவாவை கேட்டுப் பெற்று ஆசிரியர்ப் பயிற்சி பள்ளியில் இடம் கொடுகிறார்கள். கட்டிட நிதி வேண்டும் என்கிறார்கள் . கருவிகள் வாங்கவேண்டும் என்கிறார்கள் . ' எங்கள் அவையின் நிறுவனங்கள் நன்கொடை வாங்குவதில்லை ' என்று ரோமில் போய் பொய் பேசுகிறார்கள் . ஆனால் தங்கள் பள்ளிகள் முன் , அல்லது அவர்களது நிறுவனங்களின் முன் இதை கொட்டை எழுத்துகளில் எழுதி வைப்பார்களா? சொல்லுக்கும் செயலுக்கும் தெரிந்தே முரண்பட்ட ஒரு கும்பலை ' விபசார தலைமுறை ' என்று இயேசு கரித்துக்கொட்டினார் !!

நடைமுறையில் இப்படி அநியாயமாக நடந்து கொள்ளும் துறவியரை , கிருத்துவர்களை, ஆயர்கள் கண்டித்துள்ளனரா? பணி நீக்கம் செய்கின்றனரா? மறைமாவட்டத்தை விட்டுஒடிவிடு என்கின்றனரா? யார்மீது சட்டம் பாய வேண்டுமோ அவர்கள் மீது அதை பாய விடுவதில்லை . ''நன்கொடைகள் '' என்ற பெயரால் நடக்கும் இக்கொடுமைகளுக்கு இவர்களும் ஒத்துபோகிறர்கள். ஏழைகள் 50,000 உருவாவை இப்படி வாய்கரிசியாக போடா முடியுமா? எத்தனை ஏழைகளின் கண்ணீருக்கு இவர்கள் விடை சொல்லியாக வேண்டும் . எப்படி எளியோருக்கு நற்செய்தி அறிவிப்பார்கள் ?

தொடரும் .....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக